கொடநாடு எஸ்டேட்டில் பணத்தை கொள்ளையடிக்கவே காவலாளி கொலை செய்யப்பட்டுள்ளதாக நீலகிரி எஸ்.பி.முரளி ரம்பா தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் ஒன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இந்த கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக இருந்த ஓம்பகதூர் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யபட்டார்.

மேலும் ஒரு காவலாளி படுகாயமடைந்தார். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

அதே நாளில் கனகராஜின் கூட்டாளி சயான் என்பவரும் வேறொரு இடத்தில் விபத்தில் சிக்கினார். இதில் அவரது மனைவி மற்றும் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த காவலாளி கொலை வழக்கு சம்பந்தமாக நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சயானை எஸ்.பி நேரில் சந்தித்து விசாரணை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

கொடநாடு காவலாளி ஓம்பகதூர் பணத்திற்காகவே கொலை செய்யபட்டார்.வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்ற விதத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கேரளா போலீசாருடன் ஆலோசித்த பிறகு சயான் கைது குறித்த நடவடிக்கை இருக்கும்.கொடநாடு காவலாளி கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகளாக செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கில் மேலும் சிலர் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.