Asianet News TamilAsianet News Tamil

5 ஆண்டு பதவி 12 நாளில் முடிகிறது - உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரி

municipality postings-expires-in-12-days
Author
First Published Oct 12, 2016, 11:28 PM IST


உள்ளாட்சி அமைப்புகளின் 5 ஆண்டு பதவி காலம் வரும் 24ல் முடிகிறது. தேர்தல் தள்ளி போனதால் இன்னும் 10 நாளில் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 12,524 ஊராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் தலைவர், மேயர், கவுன்சிலர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 2011, அக்டோபரில் பதவி ஏற்றனர். இவர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் அக்டோபர் 24ல் முடிகிறது.

ஏற்கனவே உள்ளாட்சி தேர்தல் வரும் 17, 19ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுது. இதில் இடஒதுக்கீடு சரியான முறையில் நிர்ணயம் செய்யப்படாமல் அவசர கோலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகத்தில் நடக்க இருந்த உள்ளாசி தேர்தலை ரத்து செய்தது. மேலும், புதிய அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் 31ல் தேர்தலை நடத்தி முடிக்கும்படி உத்தரவிட்டது.

இதையொட்டி, அக்டோபர் 25ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட புது மன்றம், அதன் தலைவர், மேயர் பொறுப்பேற்க முடியாது. தேர்தல் முடியும் வரை உள்ளாட்சி மன்றங்கள் காலியாகவே இருக்கும்.

எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பதவி ஏற்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரி நியமனம் செய்யவேண்டும். இதற்கு முந்தைய காலங்களில் மன்றங்கள் இல்லாத நிலையில் தனி அதிகாரிகள் பொறுப்பில் இருந்துள்ளனர்.

அந்த நடைமுறையின்படி இன்னும் 10 நாளில் தனி அதிகாரிகள் நியமிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.

மாநகராட்சிகளில் 1996ம் ஆண்டுக்கு முன் கமிஷனர் தவிர, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தனி அதிகாரியாக இருந்தனர். அதன் பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநகராட்சி தேர்தல் நடந்து மேயர் மாமன்ற நிர்வாகத்தில் இருந்தது. 
தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநகராட்சியில் தனி அதிகாரி நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாமன்ற பதவிக்காலம் வரும் 24ம் தேதி முடிவதால் கமிஷனர் தவிர, தனிஅதிகாரியாக சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள் வரும் 25ம் தேதிக்குள் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.

இதேபோல் நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்களிலும் தற்போதுள்ள ஆணையாளருடன் அந்தந்த துறை சார்ந்த அதிகாரி தனி அதிகாரியாக நியமனம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக உள்ளாட்சித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தனி அதிகாரி நியமனம் செய்யாமல் தற்போதுள்ள கமிஷனரை வைத்தே நிர்வகிக்க முடியுமா? அதற்கு உள்ளாட்சி சட்டத்தில் இடமுள்ளதா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios