Mudra Credit Scheme Canceled - People surround collector spread rumors

இராமநதபுரம்

"முத்ரா கடன்" வழங்கும் திட்டம் ரத்து செய்யப்படும் என்று பரவிய வதந்தியால் கடன் கேட்டு ஏராளமானோர் ஆட்சியரை சூழ்ந்து கொண்டனர்.

பிரதமரின் பல்வேறு திட்டங்களில் இணை பிணையம் இல்லாத வங்கி கடன் வழங்கும் "முத்ரா கடன்" திட்டமும் ஒன்று.

இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. பிணைய உத்தரவாதம் வழங்க தேவையில்லை என்பதால் ஏராளமானோர் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க கடன் கேட்டு விண்ணப்பித்து கடன் பெற்று வ ருகின்றனர்.

இந்தத் திட்டம் குறித்து மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு காரணமாக தினமும் ஏராளமானோர் கடன் கேட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், "முத்ரா கடன் திட்டத்தில் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்தத் திட்டத்தில் வழங்கப்பட்ட கடன் தொகையை பிரதமர் மோடி ரத்து செய்யவுள்ளார்" என்ற தகவல் பரவியது.

இதனை நம்பிய பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் படையெடுத்தனர். அப்போது ஆட்சியர் நடராஜன் வந்த காரை சூழ்ந்து நின்ற பெண்கள் தங்களுக்கு உடனடியாக முத்ரா கடன் உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 இதுகுறித்து விசாரித்த ஆட்சியர் நடராஜன், "முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த அனைவருக்கும் பிணையில்லாமல் வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் மனுக்களை அளித்தால் பரிசீலித்து கடன் வழங்கப்படும். இந்த திட்டத்தை தள்ளுபடி செய்யப்பட உள்ளதாக வதந்தி பரவுகிறது. அதனை யாரும் நம்ப வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.

நேற்று இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 90 சதவீத மக்கள் முத்ரா கடன் திட்டத்தில் கடன் வழங்கக் கோரி மனு கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.