சிவகங்கை

சிவகங்கை எம்.பி-ஐ இரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருவதற்காக சென்ற எம்.பியின் கார், மாடுகள் மீது விபத்தில் சிக்கியது. அதில், ஒரு மாடு பலியானது. ஓட்டுநர் காயம் அடைந்தார்.

சிவகங்கை எம்.பி. பி.ஆர்.செந்தில்நாதன். இவர் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளராகவும் இருக்கிறார்.

சென்னையில் நடந்த அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், நேற்று முன்தினம் சென்னையில் இருந்து இரயிலில் புறப்பட்டார்.

அவரை காரைக்கடி இரயில் நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதற்காக, அவரது கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன் (32) என்பவர் கிளம்பினார்.

தேவகோட்டை அருகே ராம்நகர் அருகே கார் வந்தபோது, எதிரே இரண்டு மாடுகள் வந்தன. அப்போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநர், காரை மாடுகள் மீது மோதிவிட்டு, சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது.

இந்த விபத்தில் ஒரு மாடு நிகழ்விடத்திலேயே இறந்துபோனது. காரில் வந்த முத்துக்கிருஷ்ணனுக்கும் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த தேவகோட்டை காவலாளர்கள், விபத்தில் சிக்கிய முத்துக்கிருஷ்ணனை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக காவலாளர்கள் விசாரனை நடத்தியும் வருகின்றனர்.