Mother tried to fire the mother because she did not take action to complain 21 times in mystery.

திருநெல்வேலி

மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி 21 முறை காவல் நிலையம், காவல் கண்காணிப்பாளர், ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் தாய் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது.

அப்போது, திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் அருகேயுள்ள மாவடிக்கால் தெற்குவிளைத் தெருவைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி மகேஷ்வரி (48). இவர், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் திடீரென மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

இதனையடுத்து அங்கிருந்த காவலாளர்கள் விரைந்து செயல்பட்டு, மகேஷ்வரியிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்ததோடு, தீக்குளிக்கும் முயற்சியையும் தடுத்து நிறுத்தினர்.

மகேஷ்வரியிடம் காவலாளர்கள் விசாரித்ததில், "எனது 19 வயது மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, கடையநல்லூர், புளியங்குடி காவல் நிலையத்தில் 6 முறையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 11 முறையும், மாவட்ட ஆட்சியரிடம் 3 முறையும் புகார் அளித்தேன்.

ஆனால, இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனாலேயே தீக்குளிப்பது என்ற முடிவுக்கு வந்தேன்" என்று கதறி அழுதுக்கொண்டே தெரிவித்தார்.

பின்னர், மகேஷ்வரியை ஆட்சியர் சந்தீப் சந்தூரியிடம் காவலாளர்கள் அழைத்துச் சென்றனர். ஆட்சியரிடம் மகேஷ்வரி கண்ணீர் மல்க கூறியதாவது: "எனது மகள் தேவிகங்காவுக்கும், பாலசுப்பிரமணியன் என்பவருக்கும் 2014-இல் திருமணம் நடைபெற்றது. இது காதல் திருமணம் ஆகும்.

அதன்பிறகு பாலசுப்பிரமணியன் என்னிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தார். வீடு அடமானத்தில் இருப்பதால், கடனை முடித்த பிறகு வீட்டை விற்று பணம் தருவதாகக் கூறியிருந்தேன். அதனால் எனது மகளுக்கு வளைகாப்பு நடத்தக்கூட பாலசுப்பிரமணியன் அனுமதிக்கவில்லை.

இந்த நிலையில் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி எனது மகள் மர்மமான முறையில் இறந்துவிட்டார். அவர் மதியம் 2 மணிக்கே இறந்துவிட்டதாக பாலசுப்பிரமணியன் தெரிவித்தார். ஆனால், எனது மகள் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவமனையோ, மாலை 6 மணிக்கு எனது மகள் உயிரோடு இருந்த நிலையில் அவசரகதியில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாலசுப்பிரமணியன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடையநல்லூர் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் புகார் அளித்துவிட்டேன். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

பாலசுப்பிரமணியன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அதாவது ஜனவரி 28) மற்றொரு திருமணம் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து மகேஷ்வரிக்கு ஆறுதல் கூறிய ஆட்சியர், மனுதாரர் மகேஷ்வரியின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க உடனே உத்தரவிட்டார்.