சென்னை நெசப்பாக்கத்தில் வசித்துவரும் கார்த்திகேயன் - மஞ்சுளா தம்பதிக்கு 10 வயதில் ரித்தேஷ் சாய் என்ற மகன் இருந்தான். மஞ்சுளாவுக்கும் சேலையூரை சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்துவந்துள்ளது.

இதை அறிந்த கணவர் கார்த்திகேயன், மஞ்சுளாவை கண்டித்துள்ளார். ஆனாலும் மஞ்சுளா, நாகராஜூடன் தொடர்ந்து பேசிவந்துள்ளார். ஒருமுறை மஞ்சுளாவும் நாகராஜும் பேசிக்கொண்டிருந்ததை கண்ட மகன் ரித்தேஷ், இதுதொடர்பாக தந்தை கார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கார்த்திகேயன் போலீஸில் புகார் அளித்துள்ளார். மஞ்சுளாவுடனான உறவு தொடர்பான புகார் போலீஸ் புகார் வரை சென்றதற்கு ரித்தேஷ் தான் காரணம் என கருதி சிறுவன் ரித்தேஷை டியூசனில் இருந்து அழைத்து சென்று சேலையூரில் வைத்து மதுபாட்டிலால் தலையில் அடித்து நாகராஜ் கொலை செய்துள்ளான். அங்கேயே சிறுவனின் உடலை புதைத்துவிட்டு சொந்த ஊரான வேலூருக்கு சென்றுவிட்டான்.

டியூசன் சென்ற மகன் வீடு திரும்பாததால் கார்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், வேலூரில் வைத்து நாகராஜை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிறுவனை அடித்துக் கொன்றதற்கான மேற்கண்ட விவரங்களை தெரிவித்த நாகராஜ், மஞ்சுளாதான் அவரது மகனை கொலை செய்ய ஐடியா கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மஞ்சுளாவையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தகாத உறவால் மகனையே அடித்து கொல்ல துணிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.