More than two hundred farmers pitch the road to irrigation for irrigation ...
விருதுநகர்
விருதுநகரில், பாசனத்திற்கு அணையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ளது தேவதானம் சாஸ்தா கோவில் அணை, சேத்தூர், தளவாய்புரம், முகவூர், இளந்திரை கொண்டான் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் இந்த அணையை நம்பிதான் இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் நீராதாரமாக விளங்கும் சாஸ்தா கோவில் அணை முழுக் கொள்ளளவான 33 அடியை எட்டியது. அதனால், சுற்று வட்டாரப்பகுதி விவசாயிகள் முக்கிய பயிரான நெற்பயிருக்கான நடவு வேலையை தொடங்கினர்.
எனினும், அணையில் இருந்து பல நாட்கள் ஆகியும் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படாததால் பல ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி தொடங்கின.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு பல முறை கோரிக்கை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு மற்றும் அனைத்து கட்சி சார்பில் பெரியகுளம், நகரிக்குளம் விவசாய சங்கத் தலைவர் கணேசன் மாடசாமி தலைமையில் இருநூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தேவதானம் தென்காசி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ மறியல் போராட்டத்தில் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆதவு தெரிவித்தார். ஒன்றியச் செயலாளர் கணேசமூர்த்தி, மேற்கு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, ராமர் உள்பட பலர் மறியலில் பங்கேற்றனர்.
இந்த மறியலின்போது விவசாயிகளிடமும், எம்.எல்.ஏ.விடமும், தாசில்தார் சரவணன், துணை காவல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், பொதுப்பணித்துறை அதிகாரி ஜான்சி பேச்சுவார்த்தை நடத்தி, "இரண்டு நாள்களுக்குள் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படும்" என்று உறுதி அளித்தனர்.
இதனை ஏற்று மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.
