More than 50 people protested against the village administrative officer who did not do the job properly ...

காஞ்சிபுரம்

பணிக்கு நேரத்திற்கு சரியாக வராமல், வேலையில் மெத்தனத்தோடு செயல்படும் அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலரைக் கண்டித்து, ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் கிராம நிர்வாக ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வருவாய் கோட்டத்திற்கு உள்பட்ட, அச்சிறுப்பாக்கம் பகுதியில் பட்டா பெயர் மாற்றம், சாதி சான்றிதழ், வாரிசுச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைப் பெற கிராம நிர்வாக அலுவலரின் சான்று பெறவேண்டியது அவசியம்.

அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அவரது சொந்த ஊரான காஞ்சிபுரத்தில் இருந்து நாள்தோறும் பணிக்கு வந்து செல்கிறார். இந்த நிலையில், அவர் தமது பணிக்கு நேரத்திற்கு சரியாக வருவதில்லையாம்.

மேலும், கடந்த சில மாதங்களாக வாரிசுச் சான்றிதழ்கள், அரசின் நிதி உதவித் தொகை, இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்கள் கோரிய மனுக்களின் மீது நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவற்றில் மெத்தனமாக செயல்பட்டு வருகிறாராம்.

இதனால் அவரை மாற்றிவிட்டு வேறு ஒருவரை நியமிக்குமாறு அப்பகுதி மக்கள், மாவட்ட ஆட்சியர், மதுராந்தகம் வட்டாட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் அச்சிறுப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த அச்சிறுப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மோகன் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

அப்போது, "வரும் திங்கள்கிழமை வருவாய் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.