வெகுவிமர்சையாக நடந்த அரியலூர் ஜல்லிக்கட்டு: சீறிப் பாய்ந்த காளைகள் முட்டியதில் ஏழு பேர் பலத்த காயம்...
அரியலூரில் நடந்த ஏறுத் தழுவல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் சீறிப் பாய்ந்தன. இதில், காளைகள் முட்டியதில் ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அரியலூர்
அரியலூரில் நடந்த ஏறுத் தழுவல் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த காளைகள் சீறிப் பாய்ந்தன. இதில், காளைகள் முட்டியதில் ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர், முடிகொண்டானில் நேற்று ஏறுத் தழுவல் (ஜல்லிக்கட்டு) போட்டி நடைப்பெற்றது. இந்தப் போட்டியில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 400-க்கும் மேற்பட்ட காளை மாடுகள் கலந்து கொண்டன. இக்காளைகளை அடக்க 150-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.
பெரியசாமி கோயில் வளாகத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டு இருந்தது. முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பின்னர், ஒவ்வொரு காளைகளாக களத்தில் அவிழ்த்துவிடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை பிடிக்க வீரர்கள் போட்டிப் போட்டுக் கொண்டனர். இதில், சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டன. பல காளைகள் வீரர்களுக்கு பிடிகொடுக்காமல் சீறிப் பாய்ந்தன. இதில் காளைகள் முட்டியதில் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர். இதில் செல்வராஜ், சதீஷ், சக்திவேல், வில்சன் உள்பட ஏழு பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தப் போட்டியில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களால் அடக்க முடியாத காளைகளுக்கும் பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.