More than 300 farmers are protest and demanding to fix more prices for blackgram ...

விழுப்புரம்

உளுந்துக்கு கூடுதல் விலை நிர்ணயிக்க கோரி விழுப்புரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தின் முன்பு 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு கோலியனூர், நன்னாடு, தோகைப்பாடி, கப்பூர், சேர்ந்தனூர், கல்பட்டு, வளவனூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட விளைபொருட்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு உளுந்து வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 2000 உளுந்து மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்து இருந்தனர்.

இவற்றிற்கு ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் விலை நிர்ணயம் செய்தனர். அப்போது 100 கிலோ கொண்ட உளுந்து மூட்டை குறைந்தபட்சம் ரூ.3700-ல் இருந்து அதிகபட்சம் ரூ.4500 என விலை நிர்ணயிக்கப்பட்டது.

இந்த விலை போதுமானதாக இல்லை என்றும், கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் விவசாயிகள் முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காததால் சினம் அடைந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தைவிட்டு வெளியேறினர்.

அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது. "உளுந்து மூட்டைக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்த சாலை மறியலால் விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்த தகவல் அறிந்த காவல் ஆய்வாளர்கள் காமராஜ், மகேஷ், ராஜன், உதவி ஆய்வாளார் மருது மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக காவலாளர்கள் உறுதியளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் அனைவரும் மறியலை கைவிட்டனர். பிறகு போக்குவரத்து சீரானது.

அதன் பின்னர் விவசாயிகளிடம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "தமிழகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்துக்கு ரூ.4500 விலை நிர்ணயம் செய்யப்பட்டுதான் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே அதுபோன்றுதான் விழுப்புரத்திலும் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது" என்று கூறினர்.

தொடர்ந்து, விவசாயிகள் கொண்டு வந்த உளுந்து மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர்.

இதுகுறித்து விவசாயிகள், "உளுந்து பயிருக்கு ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். அறுவடையின்போது ஏக்கருக்கு 150 கிலோ உளுந்து வரைதான் கிடைக்கிறது. எனவே, மூட்டைக்கு ரூ.6 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்தால்தான் எங்களுக்கு நட்டம் ஏற்படாமல் இருக்கும்.

எனவே உளுந்துக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தனர்.