ஈரோடு,

ஈரோட்டில், பாரதியார் பல்கலைக்கழக அளவிலான பளு தூக்குதல் போட்டியில் 100-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட கல்லூரி மாணவிகளுக்கான பளு தூக்குதல் போட்டி ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் நேற்றுத் தொடங்கியது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் கே.கே.பாலுசாமி தலைமை தாங்கியும், போட்டிகளை தொடங்கியும் வைத்தார்.

இதில் 47 கிலோ, 52 கிலோ, 57 கிலோ, 63 கிலோ, 72 கிலோ, 84 கிலோவுக்கு உள்பட்டவர்கள் பிரிவு மற்றும் 84 கிலோவுக்கு மேற்பட்டவர்கள் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

இந்தப் போட்டிகளில் பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு உள்பட்ட ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் 100-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் ஆர்.வெங்கடாச்சலம், உடற்கல்வி இயக்குனர் தனலட்சுமி மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

இன்று (வெள்ளிக்கிழமை) 48 கிலோ, 53 கிலோ, 58 கிலோ, 63 கிலோ, 69 கிலோ, 69 கிலோ, 75 கிலோவுக்கு உள்பட்டவர்கள் பிரிவு மற்றும் 75 கிலோவுக்கு மேற்பட்டவர்கள் பிரிவுகளில் பளு தூக்குதல் போட்டி நடக்க இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து மாலையில் பரிசளிப்பு விழா நடக்கிறது.

விழாவில் கல்லூரி செயலாளர் கே.கே.பாலுசாமி கலந்துகொண்டு, அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்க இருக்கிறார்.

மேலும், போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் கல்லூரிக்கு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வழங்கப்பட இருக்கிறது.