பெரம்பலூர்

குடிநீர் வேண்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றுக் குடங்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், நக்கசேலம் ஊராட்சிக்குள்பட்ட ஈச்சம்பட்டி, புது அம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது.

இந்த நிலையில், அருகில் உள்ள கிணற்றுப் பகுதிகளுக்குச் சென்று குடிநீர் பிடித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக சம்பந்தப்பட்ட விவசாயிகள் கிணறுகளில் தண்ணீர் எடுக்க அனுமதிக்கவில்லை. 

இதனால், மிகுந்த சிரமத்திற்கு உள்ளான மக்கள், தண்ணீர் கேட்டு ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் பலமுறை புகார் மனு கொடுத்தனர். இருந்தும் அதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள், வெற்றுக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.   அதனைத் தொடர்ந்து, குடிநீர் கேட்டு கோரிக்கை மனுவை ஆட்சியர் வே.சாந்தாவிடம் அளித்தனர்.