Asianet News TamilAsianet News Tamil

பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்டோர் போராட்டம். ஏன்?

More than 100 people siege protest in Panchayat Why?
More than 100 people siege protest in Panchayat Why?
Author
First Published May 17, 2018, 10:24 AM IST


காஞ்சிபுரம்
 
கழிவுநீர் கால்வாய் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதை கண்டித்து மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. 

இந்தத் திட்டம் வருவதற்கு முன்பு அனைத்துத் தெருக்களிலும் உள்ள வீடுகளில் வடிகால் மூலம் கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது. 

இந்த நிலையில் நேற்று, "வடக்கு மாமல்லபுரத்தில் உள்ள அண்ணல் காந்தி தெரு, அண்ணல் அம்பேத்கர் தெரு ஆகிய இரண்டு தெருக்களில் உள்ள குடியிருப்புகளில் பாதாள சாக்கடை இணைப்புகளை பெற்று பயன்படுத்த வேண்டும் என்றும், 

வடிகால்வாயில் கழிவுநீரை விடக் கூடாது" என்றும் கூறி மாமல்லபுரம் பேரூராட்சி ஊழியர்கள் எந்தவித அறிக்கையும் தராமல் கழிவுநீர் கால்வாய் இணைப்புகளை துண்டித்துள்ளனர். 

இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் செய்யாமல் தங்கள் வீடுகளில் உள்ள வடிகால்வாய் இணைப்புகளை துண்டித்துள்ளார்கள் என்று குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தொண்டரணி செயலாளர் வீ.கிட்டு, நகர நிர்வாகிகள் வினோத், சாலமன், அன்பு, புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி சதீஷ் உள்பட 100–க்கும் மேற்பட்டோர் நேற்று மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி, அதிகாரிகளுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, பேரூராட்சி செயல் அலுவலர் துவாரகநாத்சிங் மற்றும் அதிகாரிகள் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, "முற்றிலும் செயலிழந்துவிட்ட பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படி குழாய்கள் இணைத்து வெற்றிகரமாக செயல்படுத்தினால் மட்டுமே தாங்கள் புதிய இணைப்புகள் பெற்று கொள்வதாகவும், சாலையில் ஏற்படும் பாதாள சாக்கடை நீர் கசிவை அடைத்து முறைப்படி இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்" என்று மக்கள் வலியுறுத்தினர்.

மேலும், "புதிய இணைப்புகள் பெற தங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும்" என்றும் அதிகாரிகளுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

இதுகுறித்து பரிசீலிப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios