More than 100 Highway Workers Struggle to Demand Different Demands ...
சேலம்
சேலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் உட்கோட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். இவர்கள் நேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைப் பணியாளர் சங்க உட்கோட்டத் தலைவர் முனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் வெங்கடேசன், கோட்ட தலைவர் தங்கராஜ், செயலாளர் கலைவாணன் அந்தோணி, சேலம் கோட்டச் செயலாளர் அன்பழகன், மாநிலத் துணைத் தலைவர் சிங்கராயன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்தப் போராட்டத்தின் போது, "நெடுஞ்சாலைத்துறைச் சாலைப் பணியாளர்களுக்கு ஊதியத்தை மாத இறுதிக்குள் வழங்க வேண்டும்,
சாலைப் பணியாளர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்,
நீதிமன்ற உத்தரவுப்படி வேலைநிறுத்த நாட்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைப் பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.
