நாமக்கல்

மீண்டும் ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க கோரி 100-க்கும் மேற்பட்டோர் நாமக்கல்லில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பூங்கா சாலையில் நேற்று காலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலர் குழந்தான் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மணிவேல், நாமக்கல் நகர செயலர் தம்பிராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

"மோகனூர் ஊராட்சி ஒன்றியம், பேட்டப்பாளையம் ஊராட்சிப் பகுதியில் கடந்த ஆறு மாதங்களாக நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தின் மூலம் வேலை வழங்காமல் அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டார்கள். 

இதனால் 500-க்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். 

எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக வேலை வழங்க வேண்டும்" என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேட்டப்பாளையம் ஊராட்சிப் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று தங்களது  கோரிக்கைக்கு வலுசேர்த்தனர்.