more than 100 ammk members siege police station and held in protest
திருநெல்வேலி
திருநெல்வேலியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தெற்கு ஒன்றிய செயலாளரை காவலாளர்கள் பிடித்துச் சென்றதால் அக்கட்சியினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு ஒன்றிய செயலாளர் குருசேவ். இவர் நேற்று சங்கரன்கோவில் சங்கரநாராயண கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெற்றதால் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அங்கு நின்று கொண்டிருந்தார்.
அப்போது, சங்க அதிகாரியின் அறையை யாரோ பூட்டுப் போட்டுவிட்டு சென்றுவிட்டதால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் நிர்வாகிகளுடன் குருசேவ் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சங்கரன்கோவில் காவல் நகர ஆய்வாளர் அருளுக்கும், குருசேவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனையடுத்து காவலாளக்ராள் குருசேவை சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்திற்கு பிடித்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த அக்கட்சியின் மாவட்ட மாணவரணி செயலாளர் சின்னத்துரை தலைமையில், நகர செயலாளர் சங்கரசுப்பிரமணியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் சங்கரன்கோவில் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆய்வாளர் அருள், கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் குருசேவை காவலாளர்கள் விடுவித்தனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றதால் அந்த பகுதியில் 2 மணி நேரத்திற்கு பரபரப்பு நீடித்தது.
