உடும்பு ரத்தம் விற்பனை செய்த வீடியோ வைரலாக பரவ அவர்களை தேடி வந்த போலீசார், வனத்துறையினர் பற்றி கவலைப்படாமல் உடும்பு ரத்தம் வேண்டுமா உடும்பு ரத்தம் என வேளச்சேரியில் கூவி கூவி விற்ற இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த உடும்பையும் கைப்பற்றினர்.

சமீபத்தில் உடும்பை கழுத்தில் அறுத்து அதன் ரத்தத்தை கிளாசில் பிடித்து சோடா கலந்து ஒரு கிளாஸ் ரூ.5000 க்கு விற்பனை செய்வதும் அதை சிலர் வாங்கி குடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த செய்தி வெளியானதால் உஷாரடைந்த வனத்துறையினர் உடும்பை கொன்று ரத்தத்தை விற்கும் ஆசாமிகளை தேடி வந்தனர். உடும்பு வனவிலங்கு அரிய விலங்குகள் பட்டியலில் இருப்பதால் அதை கொன்றால் வனவிலங்கு சட்டப்படி 8 ஆண்டுகள் அதிகபட்சம் தண்டனை கிடைக்கும்.

ஆகவே இந்த விவகாரம் பெரிதானதால் வனத்துறையினர் அவர்களை தேடிவந்தனர். நேற்று உடும்பு ரத்தத்தை விற்பனை செய்த கும்பலை சேர்ந்த சிலர் வேளச்சேரியில் உடும்பு ரத்தம் வேணும்மா சாமியோவ், உடும்பு ரத்தம். தாது புஷ்டி , ஆண்மை சக்திக்கு சிறந்தது என கூவி கூவி விற்றுள்ளனர். 

இந்த தகவல் வனத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடும்புடன் ரத்தம் விற்க நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் தாம்பரம் மப்பேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் மற்றும் மாணிக்கம் என தெரிய வந்தது. 

அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதில் சென்னையில் எத்தனை குழுக்கள் இயங்குகிறது. இன்னும் எங்கெங்கே இவர்கள் உடும்பு ரத்தம் விற்கிறார்கள். உடும்புகளை எங்கே பிடிக்கிறார்கள் என விசாரணை நடத்தி வருகின்றனர்.