கோவை,

பிரதமர் மோடி அறிவித்துள்ள குலுக்கல் முறையில் பரிசு வழங்கும் திட்டம் தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழ்நாடு பரிசுத்திட்டம் (தடைச்சட்டம்) 1979–ன் படி தடைச் செய்யப்பட்டது. மேலும், இந்த திட்டம், நாட்டின் பொதுமக்களை சூதாட்டத்திற்கு இழுத்து செல்லக்கூடிய ஒரு திட்டமாகும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர் இருதயராஜா. மாநகர செயலாளர் குமாரன், மாவட்ட பொருளாளர் வகாப் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், “கடந்த 25–ஆம் தேதி வியாபாரிகளுக்கு வருமான வரிச் சலுகை பற்றி அறிவித்து உள்ளீர்கள். இதற்கு வியாபாரிகளும், நுகர்வோர்களும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் ரொக்கம் இல்லா பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் பொது மக்களுக்கு ‘லக்கி கிரஹாக் யோஜனா‘(அதிர்ஷ்ட நுகர்வோர் திட்டம்), வியாபாரிகளுக்கு ‘டிகிதன் வியாபார் யோஜனா‘(டிகி பணவர்த்தக திட்டம்) என்ற 2 பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் ரூ.50 முதல் ரூ.3 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கான ‘லக்கி கிரஹாக் யோஜனா” திட்டத்தின் கீழ் தினந்தோறும் குலுக்கல் நடத்தி 15 ஆயிரம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் பரிசு கொடுக்கப்படும் எனவும், இந்தத் திட்டம் 100 நாட்களுக்கு செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், பொருட்கள் வாங்குகிற அனைத்து பொதுமக்களும், பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வியாபாரிகளும் பயனடையும் வகையில் குலுக்கல் நடத்தாமல் பரிசு வழங்கும் இந்த திட்டத்தை மாற்றி அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்பாக இந்திய குடிமக்கள் அனைவரும் சமம். இந்த நிலையில் பொருட்கள் வாங்கும் பொதுமக்களுக்கும், பொருட்களை விற்கும் வியாபாரிகளுக்கும் குலுக்கல் முறையில் பரிசு அறிவிப்பது சட்டத்திற்கும், நியாயத்திற்கும், அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் புறம்பானது ஆகும்.

பரிசுத்திட்டங்கள் என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சமமான உரிமை கிடைக்காத, வேறுபாடு நிறைந்த குறையுள்ள திட்டமாகும்.

மேலும், இது நாட்டின் பொதுமக்களை சூதாட்டத்திற்கு இழுத்து செல்லக்கூடிய ஒரு திட்டமாகும்.

ஏனென்றால், தினமும் 15 ஆயிரம் பேருக்கு குலுக்கல் முறையில் பரிசு என்ற திட்டத்தின்படி, ரூ.50–க்கு பொருள் வாங்கினால் ஆயிரம் ரூபாய்க்கான பரிசு கிடைக்கும் என்ற நோக்கத்தோடு செயல்படுகிறது.

பரிசுத்திட்டம் என்ற முறையில் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் பரிசுத்திட்டத்தை அறிவிப்பது தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழ்நாடு பரிசுத்திட்டம் (தடைச்சட்டம்) 1979–ன் படி சாத்தியப்படாதது.

எனவே, சட்டத்திற்குட்பட்டு இந்திய குடிமக்கள் அனைவரும் சமமான முறையில் பயனடையும் வகையில் இந்த திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.