Asianet News TamilAsianet News Tamil

பெரும் முதலாளிகளுக்கு உதவி செய்து விவசாயிகளை வஞ்சிக்கிறது மோடி அரசு…

modi government-is-helping-farmers-seducing-big
Author
First Published Dec 17, 2016, 10:44 AM IST


வாய்மேடு,

மோடி அரசு, பெரும் முதலாளிகளுக்கு மறைமுகமாக உதவி செய்து விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கை கைவிட வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ஆம் தேதி அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் வங்கிகளில் மாற்றி கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றினர். ஆனால் வங்கியில் போதிய அளவு புதிய நோட்டுகள் இல்லாததால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றி கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

அதேபோல் மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பெரும்பாலான ஏ.டி.எம். மையங்களும் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

வங்கிகளிலும் போதிய அளவு பணம் இல்லை என்று கூறுவதால் பொதுமக்கள் வங்கி வாசலில் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் நாகை மாவட்டம் வாய்மேடு கடைத்தெருவில் செயல்படாமல் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் தேவையான பணத்தை வைக்கக்கோரியும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவை.சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மோடி அரசு நாடு முழுவதும் கருப்பு பணத்தையும், இலஞ்சத்தையும் ஒழிப்பேன் என்று கூறி திடீரென 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து சாதாரண மக்களையும் கூலி தொழிலாளிகளையும் வஞ்சிக்கிற போக்கை கைவிட வேண்டும். நாட்டை சகஜ நிலைக்கு கொண்டு வர வேண்டும். சாதாரண ஏழை மக்கள் 2 ஆயிரம் ரூபாய்க்காக நாள் முழுக்க வரிசையில் நின்று உயிர் நீத்தவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். பெரும் முதலாளிகளுக்கு மறைமுகமாக உதவி செய்து விவசாயிகளை வஞ்சிக்கும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் மாவட்ட குழு உறுப்பினர் அம்பிகாபதி, விவசாய சங்க ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ராமசந்திரன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் வெற்றியழகன் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios