பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா நாடு தழுவிய Mock drill போர் ஒத்திகை நடத்துகிறது. இது சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் 244 சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் எங்கு போர் ஒத்திகை நடக்கிறது என்று பார்க்கலாம்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையில், பகல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய அரசு மே 7ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் Mock drill போர் ஒத்திகை நடத்துவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த பயிற்சியின் மூலம் எதிரி தாக்குதலின் சூழ்நிலையில் சிவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது நாட்டின் 244 சிவில் பாதுகாப்பு மாவட்டங்களில் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகிறது.
மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வான்வழி தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன்களை இயக்க, சில பகுதிகளில் முழு இருள் ஏற்படுத்தும் (பிளாக்அவுட்) நடவடிக்கைகள் மேற்கொள்ள, மாணவர்கள் உட்பட பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டியுள்ளது.
மேலும் முக்கிய நடவடிக்கைகளில் மக்கள் இடம் பெயர்வு திட்டங்களை பயிற்சி மூலம் முயற்சி செய்தல், மின்சார நிலையங்கள், ராணுவ வளங்கள் போன்ற முக்கிய கட்டமைப்புகளை முன்னெச்சரிக்கையாக மறைக்கும் நடவடிக்கைகள் இதில் அடங்கும்.
சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் என்றால் என்ன?
சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் என்பது மத்திய அரசு நியமித்துள்ள, சிவில் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தும் நோக்கத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் மற்றும் மாவட்டங்களைக் குறிக்கும். இந்த மாவட்டங்கள் பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.
இவை பின்வரும் அடிப்படைகளில் தேர்வு செய்யப்படும்:
எல்லை பகுதிகள் அருகிலுள்ள பகுதிகள்
தாக்குதலுக்கு அதிக பாதிப்பு உள்ள பகுதிகள்
முக்கிய நிறுவங்கள் அமைந்துள்ள இடங்கள் (ராணுவ வளங்கள், அணுசக்தி நிலையங்கள், வெப்ப மின் நிலையங்கள்)
முக்கிய கட்டமைப்புகள் (தேசிய நெடுஞ்சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள் ஆகியவை)
மொத்தம் 259 சிவில் பாதுகாப்பு மாவட்டங்கள் உள்ளன (2010 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சால் அறிவிக்கப்பட்டது). இவை 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
வகை I (13 மாவட்டங்கள்) – முழுமையான சிவில் பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்தும்
வகை II (201 மாவட்டங்கள்) – பகுதியளவில் திட்டங்களை செயல்படுத்தும்
வகை III (45 மாவட்டங்கள்) – குறைந்த அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்
அதிகம் சிவில் பாதுகாப்பு தேவைப்படும் மாநிலங்கள்:
மேற்கு வங்கம் – 32
ராஜஸ்தான் – 28
அசாம் – 20
பஞ்சாப் – 20
ஜம்மு மற்றும் காஷ்மீர் – 20
வகை I மாவட்டங்கள்:
தில்லி (கேண்டமெண்ட் உட்பட)
குஜராத் – சூரத், வடோதரா, காக்ராபர்
மகாராஷ்டிரா – மும்பை, உறான், தாராபூர்
ஒடிசா – தல்சர்
ராஜஸ்தான் – கோட்டா, ராவத்படா
தமிழ்நாடு – சென்னை
உத்தரப்பிரதேசம் – புலந்த்ஷஹர்
உள்துறை அமைச்சின் ஜனவரி 2023 அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 295 ஊர்கள்/மாவட்டங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டிய முக்கிய இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த பயிற்சிகள் பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையிலும், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு தயாராக இருக்கவும் உதவும்.


