திருப்பூர்

அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்த குணசேகரன் எம்.எல்.ஏ.வின் உண்ணாவிரதம், மூன்று மணிநேரத்திற்குள் ஆட்சியர் வந்து பேசி முடிவுக்கு வந்தது. ஆனால், விவசாயிகள், மக்கள் போராட்டம் என்றால்? என்ன கொடுமை சார் இது.

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் குணசேகரன். இவர் அ.தி.மு.க. அம்மா அணியில் இருக்கிறார். இவர் தனது தொகுதி மக்களின் பிரச்சனைகள், மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், வருவாய்த்துறை அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இதனால் தன் பொறுமையை இழந்த குணசேகரன், “அலுவலர்களின் மெத்தனப் போக்கை கண்டித்தும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியும் திருப்பூர் குமரன் சிலை முன் உண்ணாவிரத போராட்டத்தில் தான் ஈடுபட போகிறேன்” என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, திருப்பூர் குமரன் சிலை அருகே தனியாக மேடை ஒன்றை அமைத்து அதில் ஒரு இருக்கை போட்டுக் கொண்டு நேற்று காலை 8 மணிக்கு குணசேகரன் எம்.எல்.ஏ. தனது உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினார்.

தெற்கு தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய 38 கோரிக்கைகளையும் விளம்பர பலகையில் அச்சிட்டு உண்ணாவிரத மேடைக்கு இருபுறமும் வைத்திருந்தார்.

மேலும், குணசேகரன் இறுக்கைக்கு பின்புறம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விளம்பர பலகையும் இருந்தது.

தனது தொகுதி மக்களுக்காக தனியாக உண்ணாவிரதம் இருந்த குணசேகரன் எம்.எல்.ஏ.வை முக்கிய பிரமுகர்கள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். அவருக்கு சால்வையும் அணிவித்தனர்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ அரசு அதிகாரிகளை கண்டித்து உண்ணாவிரதம் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உண்ணாவிரத மேடையைச் சுற்றி திருப்பூர் வடக்கு காவலாளர்கள் பலத்த பாதுகாப்பும் அளித்து வருகின்ற நிலையில் காலை 11.15 மணி அளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.ஜெயந்தி, திருப்பூர் உதவி ஆட்சியர் சரவன்குமார் ஆகியோர் உண்ணாவிரத மேடைக்கு வந்து குணசேகரன் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவரிடம், “உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டனர்.

அப்போது அவர்களிடம் குணசேகரன் எம்.எல்.ஏ. கூறியது:

“தமிழக அரசுக்கு எதிராக இந்தப் போராட்டத்தை நான் நடத்தவில்லை. அரசு அதிகாரிகளின் மெத்தனப் போக்கை கண்டித்து உண்ணாவிரதம் இருக்கிறேன்.

பனியன் ஏற்றுமதி தொழில் நகரில் நொய்யல் ஆற்றின் கரைகளை கான்கிரீட் தளம் அமைத்து பலப்படுத்த வேண்டும். ஆற்றின் இருபுறமும் தார் சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும். மேலும் நொய்யல் ஆற்றுக்குள் சிறிய கால்வாய் அமைக்க வேண்டும். ஆற்றின் கரைகளில் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்றும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் நேரில் வலியுறுத்தினேன்.

ரூ.50 கோடியை ஒதுக்கீடு செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் இதற்கான திட்ட மதிப்பீடுகளை தயார் செய்து கொடுக்குமாறு திருப்பூரில் உள்ள அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

அதுபோல் நொய்யல் வீதியில் புதிதாக தொடக்கப்பள்ளி தொடங்க வேண்டும். புதிய பள்ளிக்கட்டிடம் கட்டுவதற்கான இடம் அந்த பகுதியிலேயே உள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தேன். ஆனால் இதுவரை எந்த ஒரு ஏற்பாட்டையும் கல்வித்துறை அதிகாரிகள் செய்து கொடுக்கவில்லை.

கொங்கணகிரி கந்தபெருமான் கோவிலில் ராஜகோபுரம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதில் அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகிறார்கள்.

திருப்பூர் பூலவாரி சுகுமார் நகரில், குடிசை மாற்று வாரியத்துக்கு முழு பணத்தையும் கட்டி முடித்தவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்காமல் அதிகாரிகள் உள்ளனர்.

இதுபோன்ற முக்கிய திட்டங்களுக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து திட்ட மதிப்பீடுகளை அளித்தால்தான் சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை கூட்டத்தில் இந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கும். இதுபோல் தொகுதிக்கு தேவையான திட்டங்களை அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

இதனைக் கேட்டறிந்த ஆட்சியர் எஸ்.ஜெயந்தி, ‘நாளை (சனிக்கிழமை) சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி அதில் தாங்கள் தெரிவித்த முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அரசுக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும். உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்’ என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆட்சியர், குணசேகரன் எம்.எல்.ஏ.வுக்கு மோர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

காலை 11.30 மணிக்கு உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்த குணசேகரன் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.