புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதியின்மை குறித்த புகாரைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன் திங்கள்கிழமை பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தப் பள்ளியில் 1,301 மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை, அடிப்படை வசதியில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் ஆலங்குடி சட்டப்பேரவை உறுப்பினர் சிவ.வீ. மெய்யநாதனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு அவர் கூறியது: “ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் அதிகளவு தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளி. தற்போது, இப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவிகள் ஆசிரியர் பற்றாக்குறையால் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கணிதப் பிரிவில் பயிலும் மாணவிகள் 136 பேர் ஒரே வகுப்பறையில் அமர்ந்து பயின்றுவருகின்றனர்.
இதனால், பள்ளியின் தேர்ச்சி விகிதம் குறையும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், பள்ளியில் ஆய்வகம், கழிப்பறைகள் மிகவும் சேதமடைந்துள்ளன.
இதுகுறித்து மாவட்ட கல்வித் துறை நிர்வாகத்திடம் பெற்றோர் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உடனடியாக பள்ளியின் ஆசிரியர் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
