இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் மற்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் வந்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் பாரதீய ஜனதா கூட்டணியின் சார்பில் பீகார் மாநில முன்னாள் கவர்னர் ராம்நாத் கோவிந்தும், காங்கிரஸ் கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் போட்டியிடுகிறார்கள்.

தமிழ்நாட்டில், சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டசபை குழு கூட்டம் நடைபெறும் அறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழக தேர்தல் பார்வையாளராக அனுஷ் பிரகாஷ் என்பவரும், தேர்தல் நடத்தும் அலுவலராக சட்டசபை செயலாளர் பூபதியும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்ததும், ஓட்டு பெட்டி பலத்த பாதுகாப்புடன் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது. வரும் 20-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, ஒவ்வொரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பும் 708 ஆகும். இது எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது. எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு மாநில மக்கள் தொகையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வின் ஓட்டு மதிப்பு 176 ஆக உள்ளது.

தமிழ்நாட்டில் ஆர்.கே.நகர் தொகுதியை தவிர்த்து, 233 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதில், 135 எம்.எல்.ஏ.க்கள் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். அ.தி.மு.க. 2 அணிகளாக இருந்தாலும், அனைவரும் பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில், அ.தி.மு.க. சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி காங்கிரஸ் வேட்பாளர் மீராகுமாரை ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளார். ஏனைய 2 எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ்  தனியரசு ஆகியோர் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதேபோல், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 89 பேரும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 8 பேரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ. ஒருவரும் என மொத்தம் 98 பேரின் ஆதரவு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மீராகுமாருக்கு உள்ளது.

எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியின் ஆதரவும் அவருக்கு கூடுதலாக இருப்பதால், ஆதரவு தருவோரின் எண்ணிக்கை 99 ஆக உள்ளது. அதே நேரத்தில், உடல்நலக் குறைவால் ஓய்வு எடுத்துவரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க மாட்டார் என்றே கூறப்படுகிறது. எனவே, மீரா குமாருக்கான ஆதரவு 98 ஆக குறைந்து உள்ளது.

தமிழக எம்.பி.க்களை கணக்கில் கொள்ளும்போது, அ.தி.மு.க.வுக்கு 50 எம்.பி.க்கள் உள்ளனர். இதேபோல், தி.மு.க.வுக்கு 4 எம்.பி.க்களும், பாரதீய ஜனதா, பா.ம.க.வுக்கு தலா ஒரு எம்.பி.யும் உள்ளனர். இதில், 51 எம்.பி.க்களின் ஆதரவு ராம்நாத் கோவிந்துக்கும், 4 எம்.பி.க்களின் ஆதரவு மீராகுமாருக்கும் உள்ளது. பா.ம.க. எம்.பி. அன்புமணி ராமதாஸ், ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்துவிட்டார்.தமிழகத்தை கணக்கில்கொள்ளும்போது, பா.ஜ.க. வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு 59,692, மீராகுமாருக்கு 20,080 என ஓட்டு மதிப்பு கிடைக்கும் என தெரிகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக இரு அணி எம்எல்ஏக்கள் என அனைவரும் தலைமைச் செயலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.