கட்சிக்கு வெளியில் இருந்து 18 எம்.எல்.ஏ.க்களும் செயல்பட்டதால் அவர்களை தகுதி நீக்கம் செய்தது சரியே என்று சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நாள் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது சபாநாயகர் தனபால் தரப்பில் வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார். 

கட்சிக்கு வெளியில் இருந்து தாக்குதலை நடத்தும் போது, கட்சியை விட்டு வெளியேறியதாக தான் அதை எடுத்துக்கொள்ள முடியும் என்று கூறினார்.

 

அரசை கலைப்பதற்கான அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது என்றும், அவரிடம் அரசியல் சாசன கடமைகளை ஆற்றுங்கள் என மனு அளிப்பது, ஆட்சியை கலைப்பதற்காக மட்டுமே என கருதப்படும் என்றும் வாதிட்டார். 

ஆளுநரிடம் அளித்த புகார் என்பது தனிநபருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் அல்ல என்றும், பெருபான்மை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்த முதல்வருக்கு எதிரான புகார் என்று தெரிவிக்கப்பட்டது. தங்களுடையை ஆதரவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ஆளுநரிடம் மனு அளித்ததை, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசின் மீதான அவர்களின் ஆதரவை திரும்ப பெற்றுக்கொண்டதாகவே கருத முடியும் என்று சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது.