யாழ்பாணம் நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் சேதமடைந்திருப்பதையடுத்து அந்த நூலகத்துக்கு திமுக செயல் தலைவர் 2000 புத்தகங்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

தெற்கு ஆசியப் பகுதியில் பகுதியில் அமைந்துள்ள மிகச்சிறந்த நூலகங்களில் ஒன்றாக திகழும் யாழ்பாணம் நூலகம், பாரம்பரியம் கலாச்சாரம், கல்வி மற்றும் சமயத்தின் அடையாளமாக திகழ்ந்து வருகிறது.

யாழ்ப்பாண மக்களின் பாரம்பரியம் மற்றும் கல்வி குறித்து பேசும் போதோ அல்லது எழுதும் போதோ அறிவின் பொக்கிஷமாக திகழும் இந்த நூலகத்தை தொட்டு செல்லாமல் யாரும் சென்று விட முடியாது.

 யாழ்ப்பாணத்தில் தமிழர்களின் நூலகமாக இயங்கி வந்த இந்த நூலகத்தில் அபூர்வமான தமிழ் நூல்களும், ஓலை சுவடிகளும் பாதுகாக்கப்பட்டு வந்தன. இவை தவிர உலகம் முழுவதிலும் இருந்து சேகரிக்கப்பட்ட மிகச் சிறந்த நூல்களும் இங்கு இடம் பெற்றிருந்தன.

சுமார் 97 ஆயிரம் நூல்கள் இருந்த இந்த நூலகம் 1981-ம் ஆண்டு இன கலவரத்தின் போது  தீ வைத்து எரிக்கப்பட்டது. நூலகத்தில் இருந்த 97 ஆயிரம் நூல்களும் எரிந்து போன நிலையில் நூலக கட்டிடமும் சேதமடைந்தது.

உலகெங்கும் உள்ள தமிழர்களின் தாய் நூலகமாக திகழும் இந்த  நூலகத்துக்கு நூல்கள் வழங்குமாறு உலக தமிழ்ச் சங்கம் சார்பில் வி.ஜி. சந்தோசம் கோரிக்கை  விடுத்திருந்தார்.

இதையடுத்து இந்த நூலகத்திற்கு சமீபத்தில் இந்தியாவில் இருந்து 16 ஆயிரம் புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில்யாழ்பாணம் நூலகத்துக்கு 2000 நூல்களை திமுக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவால யத்தில் நேற்று வழங்கினார்.

அவற்றை  தொழிலதிபர் வி.ஜி. சந்தோசம் பெற்றுக்கொண்டார். திமுக தலைவர் கருணாநிதி எழுதிய நூல்கள் உள்பட ஏராளமான நூல்கள் அப்போது  வழங்கப்பட்டன.