Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் ஸ்டாலின் அப்செட்: அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு!

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த சில சம்பவங்கள் முதல்வர் ஸ்டாலினை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

MK Stalin upset over some incidents that took place in kalaignar centenary function sources
Author
First Published Jun 28, 2023, 11:30 AM IST

தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்தவர் கலைஞர் கருணாநிதி. ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்தவர், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, 13 முறையும் வெற்றி பெற்றவர், அரை நூற்றாண்டு காலம் திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி, சினிமா, அரசியல், பத்திரிகையாளர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை உடையவர்.

அந்தவகையில், கலைஞர் கருணாநிதி படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களாஇ தமிழகத்தின் வருங்காலத் தலைமுறையினர் என்றென்றும் நினைவில் போற்றும் வகையில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மாநிலம் முழுவதும் ஜுன் 2023 திங்கள் முதல் ஜுன் 2024 திங்கள் வரை தமிழக அரசால் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

 அதன் தொடர்ச்சியாக, திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா, தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டுள்ளன. 

கருணாநிதியின் பன்முகத்தன்மையை பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மாணவர்கள், பெண்கள், அரசு ஊழியர்கள், பயனடைந்த மக்கள் ஆகியோரிடம் கொண்டு செல்ல பல்வேறு கருத்தரங்கங்கள், பயிலரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல், இலவச மருத்துவ முகாம்கள், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை, கலைஞர் கோட்டம், கலைஞர் நூற்றாண்டு நூலகம் என மக்களுக்கு பயனளிக்கும் பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால், கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த சில சம்பவங்களால் முதல்வர் ஸ்டாலினை வருத்தத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஸ்டாலினுக்கு நெருக்கமான அறிவாலய வட்டாரங்களிடம் பேசியபோது, கலைஞரின் நூற்றாண்டு விழாவை ஓர் ஆண்டு முழுவதும் கோலாகலமாக கொண்டாட ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். அதிமுக கொண்டாடிய எம்ஜிஆர் நூற்றாண்டு விழா போல் அல்லாமல், மக்கள் மத்தியில் கலைஞர் நூற்றாண்டு விழா ஒருவித தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அடுத்தடுத்து நடைபெற்ற எதிர்பாராத சம்பவங்கள் அவரை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என்கிறார்கள்.

விஷயம் கேள்விப்பட்டதும் ரொம்ப வேதனையா போச்சு! விரைவில் மீண்டு வாங்க! மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் ட்வீட்!

கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை  வைத்து திறக்க ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது தேதிகள் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்டது. இறுதியில் அவர் வரவேயில்லை. இதனால், செவிலியர்களுடன் இணைந்து மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலினே திறந்து வைத்தார். அதேபோல், திருவாரூர் கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அழைக்கப்பட்டார். ஆனால், அவருகும் கடைசி நேரத்தில் உடல்நலக்குறைவு காரணமாக அந்த விழாவுக்கு வரவில்லை. இதனால், தனது சகோதரி செல்வியை வைத்து கலைஞர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்தார். இதுபோன்று அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பங்கள் ஸ்டாலினை அப்செட்டாக்கியுள்ளது என்கிறார்கள்.

மேலும், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலக திறப்பு விழாவின்போது எவ்வித தடங்களும் வராமல், திட்டமிட்டப்படி சிறப்பாக அந்த விழா நடைபெற வேண்டும் என அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். இந்த நூலகத்துக்கான இடம் தேர்வு செய்யப்பட்ட போதே சில பிரச்சினைகள் எழுந்தன. எனவே, திறப்பு விழா மிகவும் பிரமாண்டமாக எவ்வித சிக்கலும் இன்றி நடைபெற வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளாராம்

 மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் நவீன வசதிகளை கொண்ட கலைஞர் நூலம் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித்தேர்வர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்நூலகம் அமையவுள்ளது. கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க நிகழ்வாக தமிழ் சமூகத்துக்கு அவர் ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறுப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios