முதல்வர் பயணத்தில் மாற்றமில்லை: திட்டமிட்டபடி இன்றிரவு டெல்லி செல்கிறார்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டபடி இன்றிரவு டெல்லி செல்கிறார்
பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும், மூன்றாவது கூட்டம் செப்டம்பர் மாதம் மும்பையிலும் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 19ஆம் தேதி (நாளை)டெல்லியில் நடைபெறவுள்ளது. அதன்படி, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் 4வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. அதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர் டெல்லி செல்லவுள்ளார். இதனிடையே, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. எனவே, மீட்பு, நிவாரணப் பணிகளை கவனிக்கும் பொருட்டு முதல்வர் ஸ்டாலினின் பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணத்தில் இதுவரை எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் கலந்து கொள்வதற்காக திட்டமிட்டபடி அவர் இன்றிரவு டெல்லி செல்லவுள்ளார். இந்தியா கூட்டணி கூட்டத்தில் நாளை கலந்து கொள்ளும் முதல்வர், நாளை மாலை மீண்டும் சென்னை திரும்பவுள்ளார்.
கனமழை: தென் மாவட்டங்களுக்கு விரைகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
இதனிடையே, வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 6ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில தலைவர்கள் கலந்து கொள்ள இயலாததால் அக்கூட்டம் நாளைய தினத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.