கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்லவுள்ளார்

தெற்கு இலங்கை கடற்கரையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை, நேற்று இரவு வரை நீடித்தது. தற்போது கனமழை பெய்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. தென்காசியில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாயினர். சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், மாவட்ட நிர்வாகத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்லவுள்ளார். வரலாறு காணாத மழையால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்லவுள்ளார்.

மழை வெள்ள நிவாரணம் ரூ.6000: அனைவருக்கும் வழங்குக - ராமதாஸ் வலியுறுத்தல்!

தென் தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழையும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, விருதுநகர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கழகத் தோழர்கள், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.