கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க வருகை தந்த சரத்குமார் மு.க அழகிரியை தேடிச் சென்று சந்தித்தது ஸ்டாலின் தரப்பை அப்ஷெட்டாக்கியுள்ளது. தினந்தோறும் கருணாநிதி உடல் நிலை குறித்து விசாரிக்க வருகை தரும் பிரபலங்கள் அனைவருமே ஸ்டாலின் மற்றும் கனிமொழியை மட்டுமே சந்தித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் ஸ்டாலின், கனிமொழி இருவரையும் சந்தித்து கருணாநிதி குறித்து விசாரித்துச் செல்கின்றனர். வரும் பிரபலங்களுடன் ஸ்டாலின் மற்றும் கனிமொழி பேசுவதற்கு என்று காவிரி மருத்துவமனையில் ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அறைக்கு அருகே மற்றொரு அறையில் மு.க.அழகிரி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் உள்ளனர். ஸ்டாலினை சந்தித்துவிட்டு அப்படியே அங்கிருந்து புறப்படுவதையே தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் கருணாநிதி உடல் நிலை குறித்து இன்று விசாரிக்க வந்த சரத்குமார் முதலில் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னதாக அழகிரி எங்கு இருக்கிறார் என்று விசாரித்துள்ளார். இதனால் தயங்கிய தி.மு.க நிர்வாகிகளிடம் அழகிரியை பார்க்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

அப்போது அங்கு இருந்த தி.மு.க நிர்வாகிகள் அழகிரி இருக்கும் அறையை காட்டியுள்ளனர். நேராக அங்கு சென்ற சரத்குமார், அழகிரியை கட்டி அணைத்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் விரைவில் கலைஞர் உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் சரத் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டுக் கொண்ட அழகிரி, வந்து நலம் விசாரித்ததற்கு நன்றி என்று மட்டும் கூறியுள்ளார். பின்னர் தான் சரத்குமார் அங்கிருந்து சென்றுள்ளார். அழகிரியின் அரசியல் முக்கியத்துவத்தை குறைத்துவிட்டதாக ஸ்டாலின் தரப்பு நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், சரத்குமார் வான்டடாக சென்று அழகிரியை சந்தித்துள்ளது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.