miss koovagam 2018 contest started villupuram

திருநங்கைகளின் திருவிழாவான கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் நடத்தப்பட்ட மிஸ் கூவாகம் போட்டியில், சென்னையை சேர்ந்த மொபினா என்ற திருநங்கை முதல் இடத்தை பிடித்து மிஸ் கூவாகமாகமானார்.

திருநங்கைகளின் குலதெய்வமாக போற்றப்படும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் தங்களின் சோகங்களையும், வருத்தங்களையும் மறந்து ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள் குவாகத்தில் திரண்டு ஆராவாரத்துடன் இந்த திருவிழாவை கொண்டாடி வருகின்றனர். ஆண்டு தோறும் இந்த விழாவின் ஒரு நிகழ்ச்சியாக, திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியான ‘மிஸ் கூவாகம்’ நடை பெறுவது வழக்கமான ஒன்று.

இந்த கலர்புல்லான “மிஸ் கூவாகம்” போட்டியில் தாங்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக, பல ஊர்களிலிருந்து வந்த திருநங்கைள் தங்களை மேலும் அழகுபடுத்திக்கொள்வதற்காக, கடந்த இரண்டு, மூன்று நாட்களாகவே ஷாப்பிங் செய்வதில் பிசியாக இருந்தனர்.
தாய்லாந்து, ஆரணி, காஞ்சி என பல ஊர்களில் இருந்து வந்திறங்கி இருந்த புடவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். சுமார் 44 பேர் பங்கேற்ற இந்த ஃபேஷன் ஷோவில், திருநங்கைகள் ரேம்ப்வாக், கேட்வாக் என அனைவரையும் அசத்தினர்.

அதனை தொடர்ந்து, காலை 11.30 மணியளவில் ‘மிஸ் கூவாகம்’ அழகிப்போட்டி நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 44 திருநங்கைகள் விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றினர்.. முதல் சுற்று முடிவில் 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு மாலையில் 2-ம் சுற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கவிஞர் சினேகன், திரைப்பட நடிகர்கள் விமல், தீபக், சுரேஷ், வெங்கட், நடிகை கஸ்தூரி உள்பட பலர் சிறப்புரையாற்றினர்.

2-வது சுற்று முடிவில் 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த சுற்றில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட 12 பேரை விழா ஒருங்கிணைப்பாளர்கள் மேடைக்கு அழைத்தனர். பின்னர் அவர்கள் மேடையில் இருந்து இறங்க மாட்டோம் என்று தெரிவித்து, அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து இந்த 12 பேருக்கும் மீண்டும் 2-வது சுற்று போட்டி நடத்தப்பட்டு, அதில் இருந்து 2 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதை தொடர்ந்து நடந்த 3-வது சுற்றில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவுத்திறன் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, 15 பேரில் இருந்து ‘மிஸ்கூவாகம்’ மற்றும் 2, 3-வது இடத்துக்கான திருநங்கைகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை சேர்ந்த திருநங்கை மொபினா ‘மிஸ் கூவாகமாக’ தேர்வு செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து 2-வது இடத்தை சென்னை பிரீத்தியும், 3-வது இடத்தை ஈரோட்டை சேர்ந்த சுபஸ்ரீயும் பிடித்தனர்.