தஞ்சாவூர்

சிறுபான்மையினர் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு, அத்திட்டங்களைப் பெற்று சமூகத்தில் மேன்மையடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

தஞ்சாவூரில் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை வகித்தார்.

அப்போது பேசிய ஆட்சியய்ர், “சிறுபான்மையினர் நலனுக்காக ஐக்கிய நாடு சபையில் 1992, டிசம்பர் 18-ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா அறிவிக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இங்கு பெரும்பான்மையாக உள்ள நாம் வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும்போது, அங்கு நாம் சிறுபான்மையினராக மாறிவிடுகிறோம்.

இந்திய நாட்டில் பொருளாதாரம் வெற்றிகரமாக இருப்பதற்கு அனைத்து சமுதாய மக்களும் ஒருங்கிணைந்து செயல்படுதவன் மூலமாக இது சாத்தியமாக உள்ளது.

சிறுபான்மையினர் அரசின் திட்டங்களை அறிந்துகொண்டு அத்திட்டங்களைப் பெற்று சமூகத்தில் மேன்மையடையலாம் என்றார்.

மேலும், மாவட்ட அளவில் அதிக அளவில் மதிப்பெண்கள் பெற்ற சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களும் மற்றும் பரிசுத் தொகையாக 13 மாணவ மாணவிகளுக்கு ரூ. 37,000, உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல உதவியாக மூவருக்கு ரூ. 4000, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 16 பேருக்கு ரூ.75 ஆயிரத்து 270 மதிப்பிலான தையல் இயந்திரங்கள், கிரைண்டர், சிறு வணிக உதவித் தொகைகளும், நரிக்குறவர் நல வாரியம் மூலம் 26 பேருக்கு ரூ.1 இலட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான உதவித் தொகைகளும், சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்களும் ஆட்சியர் வழங்கினார்.

இந்த விழாவில், தஞ்சாவூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.