minor girl married major boy

சினிமாக்களில் வரும் சில காட்சிகளைப் பார்த்துதான் தனது பெற்றோருக்கு தெரியாமல் ஓடிச்சென்று, காதலரைத் திருமணம் செய்தேன் என்று மைனர் சிறுமி கூறினார்.

இதையடுத்து, மோசமாக தணிக்கை செய்யப்பட்ட சினிமாக்களை திரையிட அனுமதி கொடுத்த தணிக்கை(சென்சார்) வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மயிலாடுதுறையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் கடந்த ஆண்டு மே மாதம் தனது 12 வகுப்பு படிக்கும் மைனர் மகளை காணவில்லை என போலீசில் புகார் செய்தார். அதே ஊரைச் சேர்ந்த 22 வயதான விமல்ராஜ் என்பவர் தனது மகளை கடத்திச் சென்று இருக்கலாம் என தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், விமல்ராஜ் மற்றும் அவரின் தந்தை மீது ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.மேலும், சுந்தர்ராஜன் தனது மகளைக் காணவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்திலும் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்து இருந்தார்.

இதைத்தொடர்ந்து, விமல்ராஜையும், அந்த மைனர் சிறுமியையும் கண்டுபிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். இதில் கேரள மாநிலம், கோழிக்கோடு நகரில் கடைசியாக விமல்ராஜின் செல்போன் டவர் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதன்பின் கோழிக்கோடு சென்ற போலீசார், கேரள போலீசாரின் உதவியுடன், கடந்த மாதம் 10ந்தேதி அந்த மைனர் சிறுமியையும், விமல்ராஜையும் பிடித்தனர். ஹேபியஸ் மனுவை சுந்தர்ராஜன் தாக்கல் செய்து இருப்பதையடுத்து, அந்த மைனர் சிறுமியையும், விமல்ராஜையும் போலீசார் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

நீதிபதிகள் எஸ். நாகமுத்து, அனிதா சுமந்த் ஆகியோர் கொண்ட அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அப்போது அந்த மைனர் சிறுமியிடம், நீதிபதிகள் விசாரணை நடத்தியபோது, அந்த சிறுமி, “ தனது காதலருடன் சேர்ந்து பல தமிழ் சினிமாக்களைப் பார்த்தேன். அந்த சினிமாக்களில் வந்த ஒரு சில “தாக்கத்தை ஏற்படுத்தும்” காட்சிகளைப் பார்த்துதான் அவருடன் ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டேன். இப்போது 4 மாத கர்பிணியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், “ மோசமான திரைப்படங்களால் சமூகம் சீரழிந்து வருகிறது. மிகவும் மோசமாக சினிமாக்களை சரியாக தணிக்கை செய்யாமல் அனுமதி கொடுத்தது தணிக்கை வாரியத்தின் கவனமின்மை. 

இதற்கு ஏன் தணிக்கை வாரியத்தின் மீது நடவடிக்கை எடுக்க கூடாது இதுபோன்ற சினிமாக்களை திரையிட அனுமதி கொடுத்து ஒரு மைனர் சிறுமி ஓடிப்போக காரணமாக இருந்ததால், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச்சட்டமான “போஸ்கோ” சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று கேட்டு, வரும் 27-ந்தேதிக்குள் சென்சார் போர்டு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.