தேர்வுக்கும், நியமனத்திற்கு எண்ணற்ற வித்யாசங்கள் உண்டு. ஜெயலலிதாவை பொறுத்தவரை, மக்கள் மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, சட்டமன்றத்திற்கு தேர்வாகி முதல்வர் ஆனவர்.

ஆனால், பன்னீரா, எடப்பாடியோ இருவருமே நியமனம் செய்யப்பட்டவர்கள். பன்னீர், ஜெயலலிதாவாலும், எடப்பாடி, சசிகலாவாலும் முதல்வர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள்.

ஆக இருவரும் நிழல் பிம்பங்களே. ஜெயலலிதா என்பது தமிழக மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுமை. ஆனால், சசிகலா அப்படி யாராலும் அங்கீகரிக்கப்பட்ட ஆளுமை அல்ல.

அதனால், அவரால் நியமிக்கப்பட்ட எடப்பாடிக்கும் மற்றவர்களை கட்டுப்படுத்தும் ஆளுமை கிடைக்கவில்லை.

ஒன்றரை கோடி தொண்டர்கள் உறுப்பினராக கொண்ட ஒரு கட்சிக்கு, தலைமை ஏற்ற ஜெயலலிதா, தவறாக முடிவெடுத்தால் கூட, அதை விமர்சிக்கும் அளவுக்கு அந்த கட்சியில் யாருக்கும் தைரியம் இல்லாமல் இருந்தது.

அதனால், வெற்றி, தோல்வி ஆகிய இரண்டுக்குமே அவர் காரண கர்த்தாகாவாக விளங்கினார். எல்லாம் ஜெயலலிதா செயல் என்றே அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இன்றோ, எடப்பாடி முதல்வர். அவரை முதல்வராக நியமித்த சசிகலா சிறையில். சசிகலாவுக்கு பதில், அந்த இடத்தை நிரப்ப வந்த தினகரனும் சிறையில்.

பத்தோடு பதினொன்றாக இருந்த எடப்பாடி முதல்வர் ஆனதால், அவரோடு சக அமைச்சர்களாகவும், எம்.எல்.ஏ க்களாகவும் இருந்த யாரும், அவரை, தங்களுக்கான தலைவராக ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.

ஆகவேதான், வருமானவரி சோதனை, காவல் துறை வழக்கு, ஊழல் குற்றச்சாட்டு என இலக்கான, விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, காமராஜ், சரோஜா போன்றவர்களின் அமைச்சர் பதவிகளை பறக்க முடியாமல் திணறுகிறார் அவர்.

அமைச்சர் பதவியை பறித்தால், ஆட்சியே கவிழும் என்று சம்பந்தப்பட்ட அமைச்சர்களே மிரட்டுவதாக தகவல்கள் வருகின்றன. அதனால், ஒரு முதல்வராக, எடப்பாடியால் சுதந்திரமாக கூட செயல்பட முடியவில்லை என்றே சொல்லப்படுகிறது.

அமைச்சர்கள் அவருடைய பேச்சை கேட்பது இல்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும், அதிகாரிகளும் அவர் பேச்சை கேட்பது இல்லை என்பதால் அவர் மிகவும் நொந்து போய் இருக்கிறார்.

முதல்வர் உத்தரவிட்டால், தலைமை செயலாளர் கேட்பதில்லை. தலைமை செயலாளர் கூறினால், துறை செயலாளர்கள் கேட்பதில்லை. துறை செயலாளர்கள் சொன்னால் கீழ்மட்ட அதிகாரிகள் கேட்பதில்லை. இதுதான் இன்றைய தமிழக அரசின் நிலையாக உள்ளது.

டாஸ்மாக் வருவாய் குறைந்ததை அடுத்து, மாநகராட்சி எல்லையில் உள்ள நெடுஞ்சாலைகளை, மாநகராட்சி சாலைகளாக மாற்றுவதற்கான கோப்பு ஒன்றை, முதல்வரை எடப்பாடி கடந்த பிப்ரவரி மாதம் தலைமை செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தலைமை செயலாளர் அந்த கோப்பை நெடுஞ்சாலைத்துறை செயலாளருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் மூன்றுமாதமாக அந்த கோப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இப்படித்தான், ஒவ்வொரு துறையிலும் முதல்வரின் பேச்சை அமைச்சர்களும், அதிகாரிகளும் கேட்பதில்லை என்று கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

எனவே, முதல்வர் பதவியில், மக்கள் தலைவர்கள் அமரும்போதுதான் அந்த பதவியின் மவுசும், அதிகாரமும் கூடுகிறது. நியமனங்கள் என்றாலே, அதற்கு மதிப்பில்லாமல் போய்விடுகிறது.