அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என மக்கள் கூட்டமைப்பு கட்சியின் பொதுச்செயலாளர் சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.

மேலும், அதிமுக முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு மற்றும் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

தொடர்ந்து அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 35 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.85 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என மக்கள் கூட்டமைப்பு கட்சியின் பொதுச்செயலாளர் சிவக்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

மேலும் அந்த மனுவில், மத்திய மாநில அரசுகளிடம் உள்ள ஆவணங்களை சிபிஐயிடம் தர வேண்டும் எனவும் ராம்மோகன்ராவ் சேலம் மத்திய கூட்டுறவு வாங்கியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.