அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரிய மனு மீது நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனிடையே, செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால், இதுதொடர்பான முறையீட்டின்படி, சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருக்கும் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரடியாக வந்து விசாரணை நடத்தி, வருகிற 28ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ள இரு தரப்புக்கும் அறிவுரை வழங்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி திமுக வழக்கறிஞர்கள் நீதிபதி அல்லியிடம் மனுதாக்கல் செய்தனர். அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டியுள்ளதால் ஜாமீன் வழங்க வேண்டும் என அதில் கோரப்பட்டிருந்தது. அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை மனுத்தாக்கல் செய்ததது.

இன்று செந்தில் பாலாஜி நாளை யார்? லிஸ்ட்டில் இருக்கும் அமைச்சர்கள்!

இது தொடர்பான விசாரணையின் போது, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே அமலாக்கத்துறை சோதனை செய்துள்ளது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்தும் கைது செய்தது ஏன்? கைதுக்கு முன் ஏன் நோட்டீஸ் அனுப்பவில்லை? என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கேள்வி எழுப்பினார். கைதுக்கான காரணங்களை செந்தில் பாலாஜியிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ தெரிவிக்கவிலை எனவும், செந்தில்பாலாஜி கைது நடவடிக்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன எனவும் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார்.

ஆனால், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. ரிமாண்ட் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால் ஜாமின் தான் கோர வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது நாளை உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்தது. காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீதும் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.