Asianet News TamilAsianet News Tamil

தீ விபத்தில் சேதமடைந்த மதுரை மீனாட்சி அம்மன் ஆயிரங்கால் மண்டபம் நாளை திறப்பு - அமைச்சர் பேச்சு...

Minister says damaged aayingaal mandabam will open tomorrow by Chief Minister order
Minister says damaged aayingaal mandabam will open tomorrow by Chief Minister order
Author
First Published Apr 20, 2018, 8:12 AM IST


மதுரை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்தில் சேதமடைந்த பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சீரமைக்கப்பட்டுவிட்டதால் முதல்வரின் உத்தரவின்படி நாளை முதல் ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட உள்ளது என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழாவில் அடியார்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று நடந்தது. 

இதற்கு அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். ஆட்சியர் வீரராகவராவ், மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாநகராட்சி ஆணையர் அனீஷ்சேகர், 

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள், மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை ஆணையர் நடராஜன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தன்பின்னர் அமைச்சர்கள், அதிகாரிகள் திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியை ஆய்வு செய்தனர்.

இதன்பின்னர் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியது:

"சித்திரை திருவிழாவை காணவரும் அடியார்களுக்கும், மக்களுக்கும் முதலமைச்சர் உத்தரவின்பேரில் சிறப்பான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் செய்துள்ளது. 

மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு மற்றும் தெற்கு சித்திரை வீதி, வடக்காடி வீதி மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் தற்காலிக தகர பந்தல் ஒரு லட்சம் சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது. திருக்கல்யாணம் நடைபெறும் பகுதியில் குளுமை வசதி செய்யப்பட்டுள்ளது. 20 இடங்களில் எல்.இ.டி. டி.வி. மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. 

திருக்கல்யாணத்தை தரிசிக்க வரும் அடியார்களுக்கு 40 ஆயிரம் பிரசாத பை, தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட உள்ளது. இது தவிர அடியார்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கல்யாண நாளன்று மருத்துவக் குழுக்கள் கோயிலுக்குள் இரண்டு இடங்களிலும், கோயிலுக்கு வெளியிலும் தயார் நிலையில் இருக்கும். சாமி புறப்பாட்டின்போது ஒரு அவசர ஊர்தி, இரண்டு பைக் அவசர ஊர்திகள் உடன் செல்லும். 

திருக்கல்யாண மேடையின் பின்புறம் ஒரு வண்டியும், மேற்கு சித்திரை வீதியில் இரண்டு தீயணைப்பு வண்டிகளும் தயார் நிலையில் இருக்கும்.  

தீ விபத்தில் சேதமடைந்த பகுதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் சீரமைக்கப்பட்டுவிட்டது. எனவே, அடியார்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதல்வரின் உத்தரவின்படி நாளை(சனிக்கிழமை) முதல் ஆயிரங்கால் மண்டபம் திறக்கப்பட உள்ளது. இதற்காக வடக்கு ஆடி வீதியில் தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும்போது, வைகை ஆற்றில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. எனவே முதலமைச்சர் ஆணை பெற்று வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும். 

கள்ளழகர் எழுந்தருளும் 435 மண்டகப்படிகளில் பாதுகாப்பான முறையில் பந்தல் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வைகை ஆற்றை சுற்றிலும் தண்ணீர் வசதி, கழிப்பறை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவலாளர்களின் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

மீனாட்சி அம்மன் கோயிலில் நிரந்தர தீயணைப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஆடி வீதிகளில் நிரந்தரமாக அவசர ஊர்தி நிறுத்தப்படும். 

கோயில் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 7-வது ஊதியக்குழுவின் படி சம்பள உயர்வு முதல்வரின் ஆணை பெற்று விரைவில் வழங்கப்படும். கோயில் நிதியில் இருந்து அவர்களுக்கு இந்த சம்பள உயர்வு வழங்க உள்ளோம்.

ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் ராஜன்செல்லப்பா, சரவணன், மாணிக்கம், பெரியபுள்ளான், பேரவை நிர்வாகிகள் தமிழரசன், வெற்றிவேல், நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், அண்ணாநகர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios