ஒரு ரூபாய்க்கு 29 பைசா கொடுக்கும் பொம்பளை: நிர்மலா சீதாராமன் மீது ராஜ கண்ணப்பன் காட்டம்!
ஒரு ரூபாய்க்கு 29 பைசா கொடுக்கும் பொம்பளை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் ராஜகண்ணப்பன் காட்டமான விமர்சித்தார்
கச்சத்தீவை மீட்போம் என பல ஆண்டுகாலமாக அரசியல்கட்சிகள் தேர்தலின் போது வாக்குறுதிகளை அளித்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தல் 2024க்கு இன்னும் 20 நாட்களே உள்ளதற்கு இடையே, கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவை விட்டுக் கொடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அண்ணாமலை பெற்ற தரவுகளைப் பகிர்ந்து பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கச்சத்தீவு தாரைவாக்கப்பட்டது கருணாநிதிக்கு முன்கூட்டியே தெரியும் என குற்றம் சாட்டினார். நிர்மலா சீதாராமனின் இந்த கருத்துக்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியாவை ஒரு தேசமாக ஏற்றுக்கொள்ள ராகுல் காந்தி தயாராக இல்லை: பாஜக குற்றச்சாட்டு!
மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அமைச்சர் கண்ணப்பனிடம், நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஒரு ரூபாய்க்கு 29 பைசா கொடுக்கும் பொம்பளை அந்த அம்மாவை நிதி அமைச்சர் என்று சொல்வதற்கு சங்கடமாக உள்ளது என ஒருமையில் விமர்சித்தார்.
மேலும், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது எனவும், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.