minister provided the equipment for Rs.3 lakh worth for 150 temples in Ramanathapuram.
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 150 சிறு கோவில்களுக்கு ரூ. 3.75 இலட்சம் மதிப்பில் வழிபாட்டு உபகரண பொருட்களை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் சிறு கோவில்களுக்கான வழிபாட்டு உபகரணங்கள் மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் தலைமை வகித்தார். இந்த விழாவில் அமைச்சர் மணிகண்டன் பங்கேற்று சிறு கோவில்களுக்கான வழிபாட்டு உபகரணங்கள் மற்றும் 176 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசியது:
“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமயம் சார்ந்த மக்களுக்கு அவரவர் புனித தலங்களுக்கு புனித யாத்திரை செல்ல உதவித்தொகை வழங்கும் திட்டம்,
ரமலான் பண்டிகையின்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களுக்கும் நோன்புக் கஞ்சி தயாரிக்க 4 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி வழங்கும் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும் உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.1000–த்தில் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் மொத்தம் 445 கோவில்கள் உள்ளன. அவற்றில் நிதி வசதியற்ற 316 சிறு கோவில்களுக்கு வழிபாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த விழாவில் 150 கோவில்களுக்கு தலா ரூ.2500 மதிப்பில் மொத்தம் ரூ.3.75 இலட்சம் மதிப்பிலான வழிபாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் உள்ள மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு புதிய அரசு சட்டக்கல்லூரி தொடங்கியுள்ளது. அதற்கான அனைத்தப் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேபோல இராமநாதபுரத்தில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் விமான நிலையம் அமைக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்” என்று அவர் பேசினார்.
