நாகப்பட்டினம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான பயிர் காப்பீட்டுத் தொகையை அமைச்சர் ஓ.எஸ். மணியன் வழங்கினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு ஒன்றியம் ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2016 - 2017-ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று, 2016 - 2017 ஆண்டுக்கான ரூ.1.52 கோடி மதிப்பிலான பயிர் காப்பீட்டுத் தொகை மற்றும் 10 விவசாயிகளுக்கு கே.சி.சி. ரூபே கார்டு வழங்கினார்.

அப்போது அவர் கூறியது:

“மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின், வழிகாட்டுதலின்படி தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தலைஞாயிறு வட்டாரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு ரூ.1.52 கோடி மதிப்பிலான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் பயிர் காப்பீட்டுத்தொகை வரவு வைக்கப்படும்.

விவசாயிகள் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய சான்று பெற்று தாங்கள் அங்கத்தினர்களாக உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விண்ணப்பித்து கடன் தொகையினை பெற்று கொள்ளலாம்.

கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு கடந்த 1913-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் 268 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 37 கிளைகளுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நாகை மாவட்டத்தில் 2016 - 2017-ஆம் ஆண்டில் 32 ஆயிரத்து 997 உறுப்பினர்களுக்கு 122 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 18 கிளைகள் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட பயிர்கடன் அளவான ரூ.120.20 கோடிக்கு ரூ.125.22 கோடி பயிர்கடனாக வழங்கியுள்ளது. 2017 - 18-ஆம் ஆண்டிற்கு நாகை மாவட்டத்திற்கு ரூ.139 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டதில் 972 நபர்களுக்கு தற்போது வரை ரூ.5.87 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசால் விவசாயிகளுக்கு கே.சி.சி ரூபே கார்டு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தற்போது கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 75 ஆயிரத்து 123 விவசாயிகளுக்கு கே.சி.சி. ரூபே கார்டு வழங்க திட்டமிடப்பட்டு 4 ஆயிரத்து 992 கார்டு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்தி விவசாயிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, பொது மேலாளர் திராவிடச்செல்வன், இணைப் பதிவாளர் (கூட்டுறவுத்துறை) ஜெயம், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், தலைஞாயிறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அவை.பாலசுப்பிரமணியன், ஆய்மூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கார்த்திகேயன், செயலாளர் மதியழகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.