கர்ப்பிணி பெண்களுக்கு 5ஆயிரம் ரூபாய்... தமிழக அரசின் உதவி தொகை திட்டம்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மழைக்கால நோய்களுக்காக இன்று முதல் டிசம்பர் மாதம் வரை 10 ஞாயிற்றுகிழமைகளிலும் 1,000இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தாய் சேய் குறைபாடு உள்ள கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்திட வாழ்வின் முதல் 1000 நல்நாட்கள் நிதி உதவி திட்டத்திற்கான 5000 மகப்பேறு தாய்மார்களுக்கு ரூபாய் 50 இலட்சம் நிதியுதவியினை நேரடி பணப் பரிவர்த்தனை மூலம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்ப்பிணி தாய் மார்களுக்கான நிதியுதவி திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதல்முறையாக தொடங்கி வைத்துள்ளோம். 5294 கர்ப்பிணி தாய்மார்களுக்கு முதல் 3 தவணை வழங்கப்படுகிறது.
நல்நாட்கள் நிதி உதவி திட்டத்தின் கீழ் முதல் தவணையாக 4 முதல் 5 மாதம் கர்ப்பம் தரித்த தாய்மார்களுக்கு ரூ.1,000, 2-வது தவணையாக 5 முதல் 6 மாதம் ரூ.1,000, மூன்றாம் தவணையாக 9 மாதம் ரூ.1,000 தரப்படுகிறது. அதன்பிறகு குழந்தை பிறந்த பிறகும் மொத்தம் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.5,000 வழங்கப்படுகிறது என தெரிவித்தார்.
தமிழக சுகாதாரத் துறை சார்பில் வரும் நவம்பர்4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.