தூத்துகுடி

கோவில்பட்டியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் சாராயக் கடையை மூடக்க்கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள், அந்தப் பக்கமாக வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவின் காரையும் முற்றுகையிட்டு அமைச்சரிடம் மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியில் புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் கடந்த 1–ஆம் தேதி கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதனால் சாராயங்கள் ஏற்றிவந்த லாரி திருப்பி அனுப்பப்பட்டது. அன்று அந்த டாஸ்மாக் சாராயக் கடையும் திறக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நேற்று மாலையில் ஆலம்பட்டி பகுதி மக்கள் மீண்டும் டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த அமைச்சர் கடம்பூர் ராஜூவின் காரை முற்றுகையிட்டனர். அப்போது இந்த சாராயக் கடையை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். அவர்களிடம் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை மனுவையும் வழங்கினர்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்று உறுதியளித்தார்.

இதனையேற்ற மக்கள் அனைவரும் அங்கிருந்து போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துச் சென்றனர்.