காளானுடன் இமயமலை இணைய முடியுமா? என அமமுகவுடன் அதிமுக இணைய வேண்டும் என தங்கதமிழ்ச்செல்வன் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். 

ராஜாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவு எடுப்பார் என நம்புவதாகவும், அவரை கட்டாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

 

நேற்று தமிழ்ச்செல்வன், எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் அதிமுக திருந்தி வந்தால் அமமுக - அதிமுக இணைந்து பணியாற்றலாம் அது இருகட்சிகளுக்கும் பலம்தான் என கூறியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் பந்திக்கே அழைக்கவில்லை ஆனால் வாழை இலை ஓட்டை என தங்க தமிழ்ச்செல்வன் கூறுகிறார். அதிமுக என்ற இமயமலை, அமமுக என்ற காளானுடன் இணைய முடியுமா என்றார். மேலும் சசிகலா, டிடிவி தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு வரலாம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

மேகதாது விவகாரம் தொடர்பாக பேசிய போது திருநெல்வேலி அல்வா முதல் மஸ்கோத்து அல்வா வரை சாப்பிட்டு தாங்கள் வலிமையாக இருப்பதால், கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், தங்களுக்கு அல்வா தர முயற்சிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.