ஈரோடு,
ஈரோடு பேருந்து நிலையத்தில் விதிகளை மீறிய சென்ற மினிப்பேருந்து மோதியதில் அரசுப் பேருந்தின் கண்ணாடி தூள் தூளாக நொருங்கியது. பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர்தப்பினர்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 12.25 மணியளவில் கோவைக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தை ஓட்டுநர் சசிக்குமார் ஓட்டினார். நடத்துனராக சக்திவேல் பணியாற்றினார்.
அந்த பேருந்து, சூரம்பட்டி நகர பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதிக்கு அருகில் சென்றுக் கொண்டிருந்தபோது, முத்தம்பாளையத்திற்குச் செல்லும் மினி பேருந்து ஒன்று குறுக்கே வந்தது.
எதிர்பாராதவிதமாக அரசு பேருந்தும், மினி பேருந்தும் மோதிக் கொண்டன. இதில் அரசு பேருந்தின் முன்பக்க கண்ணாடி தூள் தூளாக நொறுங்கியது. இதனால் 2 பேருந்துகளிலும் இருந்த பயணிகள் கூச்சலிட்டுஅலறினர். ஆனால் பயணிகள் சிறிய காயங்களோடு உயிர்தப்பினர்.
இந்த விபத்தினால் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு நகர காவலாளர்களும், அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து செனறு விசாரணை நடத்தினர்.
பின்னர் மினி பேருந்துயும், அரசு பேருந்துயும் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினர். இந்தச் சம்பவத்தினால் பேருந்து நிலையமே பரபரப்பானது.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியது,
‘‘ஈரோடு பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகள் நிறுத்துவதற்காக தனி இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால், சூரம்பட்டி, இரயில்நிலையம் செல்லும் நகர பேருந்துகள் நிறுத்தப்படும் பகுதியிலும் மினி பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றனர். இந்த பகுதியில் மினி பேருந்துகள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், விதிமுறையை மீறி மினி பேருந்துகள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்தும் அப்படிதான் ஏற்பட்டது” என்றுத் தெரிவித்தார்,.
