MHA conducted Multi State Mega Mock Tsunami Exercise 2017 today
சுனாமி வந்தால் பாதுகாப்பது எப்படி என்று இன்று ஓர் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியால் திடிரென பீதி ஏற்பட்டது.
கடலோர மாவட்டங்களில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தமிழக அரசுடன் இணைந்து இந்த ஒத்திகையை நடத்தியது. ஆனால் இது குறித்து அறியாததால் ஒத்திகை நிகழ்ச்சியைக் கண்டு மீனவர் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.

தமிழகத்தின் 13 கடலோர மாவட்டங்களில் இந்த ஒத்திகை தத்ரூபமாக நடத்தப்பட்டது. முன்னதாக இது குறித்து நேற்று மத்திய உள்துறையின் மூலம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. அதில், மேற்கு வங்கம், ஒடிஷா, ஆந்திரப் பிரதேசம், தமிழகம் ஆகிய நான்கு மாநிலங்களில், 31 கடலோர மாவட்டங்களில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுவதாக, அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இதன் படி, குறிப்பிட்ட சில மீனவ கிராமங்களில் இன்று இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் பெசன்ட் நகர், ஊரூர்குப்பம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நயினார்குப்பம் உள்ளிட்ட இடங்களில் இந்த ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் பொதுமக்களும் பங்கு பெற்றனர்.
கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி போல் பேரழிவு வந்தால் எப்படி பாதுகாப்பது, பாதிக்கப்பட்ட மக்களை எப்படி காப்பாற்றுவது என்பதை அவர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர். ஆனால் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை ஏதோ நிஜம் என்று நம்பி வேடிக்கை பார்த்த சிலர் பயத்தில் ஓடினர். அவர்களை போலிஸார் சமாதானப் படுத்தி இது ஒத்திகைதான் என்று அழைத்து வந்தனர்.
சென்னை பெசன்ட் நகரில் நடந்த ஒத்திகையில் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும் பொதுமக்களும் பங்கேற்றனர். பொதுமக்களில் சிலர் கடலில் மூழ்குவது போல நடித்துக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மின்னல் வேகத்தில் சென்று காப்பாற்றி அழைத்து வந்தனர். சுனாமி வந்தால் வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற முடியாத வயதான மூதாட்டிகளை போலீசார் அப்படியே தூக்கிக் கொண்டு ஓடினர்.

அது போல், இன்னும் சற்று நேரத்தில் சுனாமி வரப்போகிறது என்று ஒலிபெருக்கியில் போலீசார் எச்சரித்துக் கொண்டே வந்தனர். சுனாமி பாதுகாப்பு ஒத்திகையைப் பார்த்தும், வேடிக்கை பார்த்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். ஆட்டோ டிரைவர் ஒருவர் இதை உண்மை என நம்பி அங்கிருந்து வேகமாக ஆட்டோவை ஓட்டிச் செல்ல முயன்றார். அப்போது அங்கிருந்த ஒருவர், இது சுனாமி ஒத்திகைதான். பயப்பட வேண்டாம் என்று விளக்கினார். இப்படி சில சுவாரஸ்யங்களுடன் இந்த ஒத்திகை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
