விழுப்புரம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து விழுப்புரத்தில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் 105 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் நேற்று விழுப்புரத்தில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர்கள்(தெற்கு) ரவி பொன்மலை, (வடக்கு) சிவசங்கர், அவைதலைவர் அயில்நாயுடு, மகளிர் அணி செயலாளர் சுமதி சிவக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விழுப்புரம் இரயில் நிலையம் முன்பு மதியம் 2 மணிக்கு ஒன்று திரண்டனர்.

பின்னர் அவர்கள், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்" என்றும் முழக்கங்களை எழுப்பியவாறு இரயில் நிலையத்துக்குள் புகுந்தனர். 

அப்போது, இரயில் நிலையத்துக்குள் வந்த புதுச்சேரி - திருப்பதி பயணிகள் இரயிலை மறித்தனர்.  உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த விழுப்புரம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர் மற்றும் காவலாளர்கள் விரைந்து சென்று இரயில் மறியலில் ஈடுபட்ட 105 பேரை கைது செய்தனர்.