Messy survey No relief to drought affected farmers
தேனி மாவட்டத்தில், வறட்சி பாதிப்பு கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடியால், தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி, க.மயிலை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி கிடைக்காத நிலையால் விவசாயிகள் வேதனையில் இருக்கின்றனர்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் இடுபொருள் நிவாரண நிதியை விவசாயிகளின் வங்கிக் கணக்கு மூலம், மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள், கம்பம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில் 12 ஆயிரத்து 247 எக்டேர் பரப்பளவில் மானாவாரி, தென்னை உள்ளிட்ட வேளாண்மை பயிர்கள், 3 ஆயிரத்து 58 எக்டேர் பரப்பளவில் தோட்டப் பயிர்கள், 57 எக்டேரில் மல்பரி மற்றும் பட்டு வளர்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு, மொத்தம் 17 ஆயிரத்து 94 விவசாயிகளுக்கு ரூ.15 கோடியே 86 இலட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இதில், நெல் பயிருக்கு வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாவட்டத்தில் கடந்த 2016 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் 2-ஆம் போக நெல் சாகுபடி நடைபெறாததால், நெல் சாகுபடி விவசாயிகளுக்கு அரசு நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்று, வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதால், 14 ஆயிரத்து 700 ஏக்கரில் முதல் போக நெல் சாகுபடி தாமதமாகவே தொடங்கியது. இதில், போதிய தண்ணீரின்றி 7 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் கருகின. மகசூல் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்பார்த்து, கடந்த நவம்பர் மாதம் கம்பம் பள்ளத்தாக்கில் 4 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் 2-ஆம் போக நெல் சாகுபடியில் ஈடுபட்ட விவசாயிகள், பருவமழை பொய்த்ததால் தண்ணீரின்றி பயிர்கள் கருகி நட்டமடைந்தனர்.
எனவே, சுமார் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல் மற்றும் 2-ஆம் போக நெல் சாகுபடியில் ஏற்பட்ட வறட்சி பாதிப்புக்கு, அரசு நிவாரண உதவி வழங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தென்னை விவசாயத்தில் வறட்சியால் முழுமையாக பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கும், காய்ப்புத் திறன் குறைந்த மரங்களுக்கும் நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் 500 எக்டேர் பரப்பளவில் மட்டும் தென்னை பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுக்கப்பட்டு நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
வறட்சி பாதிப்பு கணக்கெடுப்பில் ஏற்பட்ட குளறுபடியால், தேனி, பெரியகுளம், தேவதானப்பட்டி, க.மயிலை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நிவாரண உதவி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
