கோயம்புத்தூர்

தியானம் செய்தால் மனதில் உள்ள அசுத்தங்கள் அகன்று தூய்மையாக மாறும் என்று கோவையில் நடந்த கல்லூரி விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் நிறுவனர் தினவிழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. 

இந்த விழாவுக்கு கல்லூரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மாணிக்கம், தாளாளர் பாலசுப்பிரமணியம், இணை தாளாளர் சங்கர் வாணவராயர், பதிவாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று புதிதாக கட்டப்பட்ட மகாத்மா காந்தி நூலகத்தையும், ஞானசபை என்னும் தியான மண்டபத்தையும் திறந்து வைத்தார். 

அதனைத் தொடர்ந்து அருட்செல்வர் விருதை கோவை தொழில் அதிபர் ஜி.டி.கோபால், தமிழ் அறிஞர் அவ்வை நடராஜன் ஆகியோருக்கு வழங்கினார். அவ்வை நடராஜனுக்கு வழங்கப்பட்ட விருதை அவருடைய மகன் அருள் பெற்றுக்கொண் டார்.

பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "அனைவருக்கும் காலை வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் சௌக்கியமா? என்று தமிழில் பேசினார். 

பின்னர், ஆங்கிலத்தில் தொடர்ந்த அவர், "தமிழ் மொழி மிகவும் இனிமையானது. தமிழ் மொழியை நான் மிகவும் நேசிக்கிறேன். 

மகாத்மா காந்தி தியாகத்தின் மறு உருவம். அவர் கடைசி வரை எளிமையை கடைபிடித்தார். பணம், புகழ், கற்றலை விட ஒழுக்கமே மிகவும் முக்கியம். 

விவேகானந்தர் போன்று மாணவர்கள் அனைவரும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். நாம் பழகும் ஒவ்வொருவருக்கும் நன்றியை கூற கற்றுக் கொள்ள வேண்டும். தியானம் செய்தால் மனதில் உள்ள அசுத்தங்கள் அகன்று தூய்மையாக மாறும். 

மாணவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.  வேலைவாய்ப்புகள் கிடைக்கும்போது அதை தவறவிடாமல் பயன்படுத்தி கொள்ள வேண்டும். பணம் மட்டும் வாழ்க்கை இல்லை. நேர்மையாக இருந்தால்தான் அது நம்மை வெளி உலகத்துக்கு எடுத்துச் செல்லும். எனவே மாணவர்கள் அனைவரும் எந்த தருணத்திலும், எப்போதும் நேர்மையுடன் இருக்க உறுதி ஏற்கவேண்டும்" என்று அவர் பேசினார்.

இந்த விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். முடிவில் கல்லூரி முதல்வர் செந்தில் நன்றி தெரிவித்தார்.