நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து, தமிழகத்தில் இன்னும் ஓரிரு நாட்களில், மருத்துவ கலந்தாய்வு அறிவிக்கப்படும் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

நீட் தேர்வு விவகாரத்தில், தமிழக அரசாணை தடை செய்யப்பட்டதை எதிர்த்து, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி தேர்வையும் நடத்தி முடித்தது. 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

தமிழக மருத்துவர் மாண சேர்க்கையில் 85 சதவீதம் உள் இட ஒதுக்கீடு பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை கொண்டு வந்தது.

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை அடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

தமிழக அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை தடை செய்ய முடியாது என்றும், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று கூறினார்.

மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை
குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.