அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்டித்து சிதம்பரத்தில் மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை, மருத்துவ மற்றும் பல்மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்வி கட்டணத்தையே, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கும் நிர்ணயம் செய்யக்கோரி சமூக, சமத்துவத்திற்கான மருத்துவ சங்கம் சார்பில் கவனஈர்ப்பு போராட்டம் சிதம்பரம் காந்திசிலை அருகே நடைபெற்றது.
போராட்டத்திற்கு சமூக, சமத்துவத்திற்கான மருத்துவ சங்க தலைவர் ரவீந்திரநாத் தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ படிப்பு, பல்மருத்துவ படிப்பு போன்ற படிப்புகளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியை கண்டித்தும், அரசு மருத்துவ கல்லூரிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகையையே வசூலிக்க கோரியும், இதற்கு அவசர சட்டம் கொண்டுவரக்கோரியும் கோஷமிட்டனர். இதில் சமூக சமத்துவத்திற்கான மருத்துவ சங்க நிர்வாகிகள், பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி மாணவ–மாணவிகள், மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
