காஞ்சிபுரம்

அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் மருத்துவ மற்றும் சட்ட கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரியும் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து மருத்துவமனை அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனிதாவின் சாவுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் நீட் தேர்வு குறித்து மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்தும், தமிழகத்துக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு குறித்த சட்டம் இயற்றக் கோரியும் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், முதலாமாண்டு மாணவர்கள் முதல் நான்காம் ஆண்டு மாணவர்கள் வரை அனைவரும் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவர்களுகும் அனிதா சாவுக்கு நீதி கேட்டும், நீட் தேர்வு ரத்து செய்யக் கோரியும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அதேபோன்று செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகே, செங்கல்பட்டு வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதற்கு சங்கத்தின் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.  சங்க நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த வழக்குரைஞர் குமரப்பன் உள்ளிட்டோர் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல அனிதா மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து திருபெரும்புதூர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.